மரபணுக்களின் ஓர் தொகுப்பே ஒரு மரபுத்தொகுதியாகும்.
ஒவ்வொரு உயிரினமும் அதன் மரபணு தகவல்களை வரையறுக்கும் குரோமோசோம் தொகுப்புகளை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக மனித மரபணுத் தகவலானது, உட்கருவிளிருக்கும் 46 குரோமோசோம்கள் தொகுப்பினுள் குறியிடப்பட்டுள்ளது. குரோமோசோம்கள் 23 ஜோடிகளாகும் - ஒவ்வொரு ஜோடியிளிருக்கும் ஒரு குரோமோசோம் தாயிடமிருந்தும், மற்றொன்று தந்தையிடமிருந்தும் வருகிறது. குரோமோசோம்களின் ஒரு ஜோடி - எக்ஸ் (X) மற்றும் ஒய் (Y) – பாலினத்தையும், மற்ற 22 ஜோடிகள் பால்சாரா மரபுத்திரிகளையும் (Autosomes) குறிக்கும். எனவே, மனித மரபணுத்தொகுதி ஒரு மிக நீண்ட டிஎன்ஏ மூலக்கூறுகளாலானது. ஒவ்வொன்றும் ஒரு குரோமோசோமைச் சாரும். 35,000 மரபணுக்கள், இந்த மூலக்கூறுகளிள் மேல் அணிவரிசையாகியுள்ளது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மனித மரபுத்தொகுதி திட்டத்தின் (HGP- Human Genome Project) பொருளானது டிஎன்ஏ மூலக்கூறுகளின் முழு நியூக்ளியோட்டைடு வரிசைமுறையைக் (இடம் மற்றும் அடையாளத்தை தீர்மானிக்க) கண்டறிவதேயாகும். மனித மரபணுத் தொகுதியை வரிசைப்படுத்த, தானியங்கி இயந்திரங்களையும் (automated machines), மரபணுக்களைத் தேடும் மற்றும் அடையாளம் செய்யும் இயந்திரநிரல்கலையும் (computer programs) சார்ந்திருக்கின்றது. மனித மரபணுவின் டிஎன்ஏ வரிசைக்கான ஒரு "பணி வரைவு" (Working draft) ஜூன் 2000 ல் முடிக்கப்பட்டது. இந்த பணி வரைவின் ஆரம்ப பகுப்பாய்வு பிப்ரவரி 2001ல் வெளியிடப்பட்டது.